கனடாவில் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான டொரன்டோ பியர்சன் விமான நிலையத்திற்கு அருகாமையில் வாழ்ந்து வரும் மக்கள், விமானங்கள் பறக்கும் சத்தம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
விமானங்கள் பறக்கும் சத்தம் தங்களை வெகுவாக பாதிப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நள்ளிரவு வேளைகளில் விமானங்கள் பறக்கும் சத்தம் தங்களது உறக்கத்திற்கு இடையூறாக அமைகின்றது என மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எட்டு முதல் ஒன்பது மணித்தியால நித்திரை அத்தியாவசியம் என அரசாங்கம் குறிப்பாக கனடிய சுகாதார திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் விமானங்கள் பறக்கும் சத்தம் ஆரோக்கியமான நித்திரைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6:30 மணி வரையில் சுமார் 39 விமானங்கள் தமது வீட்டுக்கு மேல் பறந்ததாக குறித்த பகுதியைச் சேர்ந்த பெபியோ ஒவிட்டினி தெரிவித்துள்ளார்.
விமான பயணங்களினால் ஏற்படக்கூடிய சத்தம் குறித்து முறைப்பாடு செய்வதற்காக பியர்சன் விமான நிலையம் மக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றினையும், இணைய தளமொன்றையும் அறிமுகம் செய்துள்ளது.
எவ்வாறினும் இந்த முறைப்பாடு செய்யும் முறைமை நடைமுறைக்கு பொருத்தமற்றது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் விமானம் பறக்கும் சந்தர்ப்பத்தில் அது பற்றிய விவரங்களை பதிவிட்டு முறைப்பாடு செய்வது தமது நித்திரையை மேலும் குழப்பும் செயற்பாடு என மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே விமானங்கள் பறப்பதனால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் எளிமையான வழிமுறை ஒன்று அவசியம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
பியர்சன் விமான நிலையம் ஊடாக மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஆறு வீத பங்களிப்பு கிடைக்கப்பெறுவதாகவும் 50000த்திற்கும் மேற்பட்டவர்கள் விமான நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தின் ஒலி மாசடைதல் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டு எடுக்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.