கனடாவின் ஆல்பர்ட்டாவில் விபத்தில் சிக்கியது மகள் என தெரியாமல் மருத்துவ உதவிக்குழுவில் பணியாற்றும் தாயார் ஒருவர் சம்பவப்பகுதிக்கு விரைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆல்பர்ட்டாவில் கடந்த வாரம் சாலை விபத்து தொடர்பில் அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளது Jayme Erickson தலைமையிலான ஒரு குழு.
இதில் 17 வயதான சிறுமி ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், Jayme Erickson தம்மால் இயன்ற முதலுதவிகளை முன்னெடுத்த பின்னர் ஹெலிகொப்ட்டர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் பொலிசார் வெளியிட்ட தகவலில், பலத்த காயமடைந்த அந்த 17 வயது சிறுமி தமது சொந்த மகள் என்பதை Jayme Erickson தெரிந்துகொண்டுள்ளார். விபத்தில் சிக்கிய வாகனத்தில், குறித்த சிறுமி மோசமாக சிக்கிக்கொள்ள, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரே, அவரை மீட்டுள்ளனர்.
இந்த நிலையில், பணி முடித்து Jayme Erickson குடியிருப்புக்கு திரும்பியுள்ளார். அப்போது தான் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. சென்று பார்த்த அவருக்கு, பொலிசார் நடந்த சம்பவத்தை தெரிவிக்க, Jayme Erickson அந்த அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்த Jayme Erickson, தமது மகளை கடைசியாக சந்தித்துள்ளார். காயங்கள் காரணமாக உயிர் தப்புவது கடினம் என்றே மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தமது பணியில் அப்படியான ஒரு சூழலை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும், அந்த நாள் தமது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.