கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாட்டர் கன் (Water gun) அல்லது நீர் விளையாட்டு நீர்த்துப்பாக்கியால் தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சிம்கோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.
அண்மையில் நடைபெற்ற லேபர் டே நிகழ்வுகளின் போது குறித்த பெண் அண்டை வீட்டு சிறுவர்களுடன் கூடி விளையாடியுள்ளார்.
இதன்போது வாட்டர் கன் ஒன்றை எடுத்துக்கொண்டு சிறுவர்களை துரத்திச் சென்றபோது இடையில் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் மீது நீர்த்துப்பார்க்கியிலிருந்து நீர் பாய்ச்சியடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தினால் ஆத்திரமுற்ற நபர் உடனடியாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இது தற்செயலாக இடம் பெற்ற சம்பவம் என 58 வயதான வென்டி வாஸிக் என்ற பெண் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தான், குறித்த அயலவரிடம் பலமுறை மன்னிப்பு கேட்ட போதிலும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளாது கூச்சலிட்டு பொலிஸாருக்கு அறிவித்தார் என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை பொலிசாருக்கு தெளிவுபடுத்திய போதிலும் பொலிஸார் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு ஒரு சம்பவத்திற்கு குற்றவியல் அடிப்படையில் விசாரணை நடத்துவதானது வளங்களை விரயமாக்கக்கூடிய செயல்பாடு என விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.