கனடாவில் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்ட நிலையில், சாரதி ஒருவர் வாகன பதிவு எண் புதுப்பித்தல் விதி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்ராறியோவின் பிராம்டனில் வசிக்கும் மத்தியாஸ் ரூசோ என்பவர் கியூபெக்கின் Gatineau பகுதியில் பயணித்த நிலையில், அவரது வாகன பதிவு எண் ஏப்ரல் மாதமே காலாவதியானதாக கூறி 489 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒன்ராறியோ மாகாண நிர்வாகம் வாகன எண் புதுப்பித்தல் கட்டணத்தை ரத்து செய்துள்ள நிலையில், புதுப்பித்தல் தேவை இனி இருக்காது என்றே தாம் கருதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் உண்மையில் அவ்வாறல்ல என்பது தமக்கு தற்போது தெளிவாகியது என குறிப்பிட்டுள்ள ரூசோ, இந்த விதி தொடர்பில் மக்களுக்கு தெளிவான புரிதல் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்ராறியோ நிர்வாகம் தொடர்புடைய வாகன எண் புதுப்பித்தல் விதியை நீக்கியதுடன், ஆண்டுக்கு 120 டொலர் வரையில் சாரதிகள் சேமிக்க முடியும் என குறிப்பிட்டிருந்தது.
மட்டுமின்றி, கட்டணத்தை கைவிடும் அதே வேளையில், குடியிருப்பாளர்கள் தங்கள் வாகன இலக்கத்தை புதுப்பிக்க வேண்டும் என்று மாகாண அரசாங்கம் அந்த நேரத்தில் தெளிவுபடுத்தியது.
வாகன சாரதிகள் ஒவ்வொரு இரண்டு அல்லது ஓராண்டுக்கு ஒருமுறை தங்கள் வாகன உரிமத்தை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது என போக்குவரத்து அமைச்சரகமும் விளக்கமளித்துள்ளது.
இதனால், அவர்களின் வாகன காப்பீடு செல்லுபடியாகும் என்பதை உறுதிசெய்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது. மாகாண நிர்வாகம் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறியுள்ள ரூசோ, பொதுமக்கள் வாகன பதிவு எண்ணை புதுப்பிக்க வேண்டுமா அல்லது ஏன் அபராதம் விதிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு எண் மற்றும் சுகாதார அட்டைகளுக்கான புதுப்பித்தல் அறிவிப்புகளை அனுப்புவதை மாகாண நிர்வாகம் சமீபத்தில் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.