பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் கடந்த ஐந்து நாட்களில் சுமார் 486 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன. இது வழக்கத்தை விட சடுதியான மரணங்களில் 195 வீத அதிகரிப்பாக பதிவாகியுள்ளது.
கனடாவில் பல மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்ப அலை பதிவாகி வரும் நிலையில் இந்தத் திடீர் மரணங்கள் அதிகரித்த வெப்பத்தால் ஏற்பட்டவையாக இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடுதியான உயிரிழந்தவர்களில் பலர் வயது முதிர்ந்தவர்களாவர். இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்,
கனடா உட்பட வட அமெரிக்கா முழுவதும் அசாதாரணமாக வெப்பநிலை அண்மைய நாட்களில் பதிவாகிவருகிறது.
இவ்வாறு அதிகரித்த வெப்பமே திடீர் மரணங்களின் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைமை சட்ட வைத்திய அதிகாரி லிசா லாபோயின்ட் தெரிவித்துள்ளார்.
வெப்ப அலைகளில் இறந்தவர்களில் பலர் காற்றோட்டமில்லாத வீடுகளில் தனியாக வசித்து வந்தவர்கள் என அவர் கூறினார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 49.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்தது. இதற்கு முன்னர் ஒருபோதும் கனடாவில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகவில்லை.
கடும் வெப்பம் அதிகரித்துவரும் நிலையில் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நபர்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கனேடியர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பர்ட்டா மாகாணங்கள், சஸ்காட்செவன், வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் யூகோனின் ஒரு பகுதிக்கு கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் கடும் வெப்ப அலை முன்னெச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இதேவேளை, கனடாவின் அண்டை நாடான அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் முன்னோருபோதும் இல்லாத வகையில் இம்முறை கடும் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
அமெரிக்க நகரங்களான போர்ட்லாண்ட் மற்றும் சியாட்டிலின் வெப்பநிலை கடந்த 1940 ஆம் ஆண்டின் பின்னர் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
ஒரேகனில் உள்ள போர்ட்லாண்டில் 46.1 டிகிரி செல்சியஸ் வெப்பமும் சியாட்டில் 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக அமெரிக்க தேசிய வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. கேபிள்கள் உருகும் அளவுக்கு வெப்பம் தீவிரமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வொஷிங்டனின் ஸ்போகேனில் உள்ள மக்கள் வெப்பத்தை சமாளிக்க அதிகளவில் வாயு சீராக்கிகளை அதிகளவு பயன்படுத்துவதால் மின்சார நுகர்வு இரு மடங்காக அதிகரித்துள்ளது என அங்குள்ள மின் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வொஷிங்டன் சில பகுதிகளில் பாலைவனத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாக சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.