Reading Time: < 1 minute

வடதுருவத்தின் ஊடாக கனடா மற்றும் அமெரிக்க நாடுகள் வரை எயார் இந்தியா தனது சேவையை இந்த மாதயிறுதியில் விரிவாக்கவுள்ளது.

சர்வதேச விமானங்கள் சில குறித்த வடதுருவ வான் மார்க்கத்தில் பயணித்துள்ளன. ஆனால், ஓர் இந்திய விமானம் கூட இந்த மார்க்கத்தில் பயணித்தில்லை.

முதன்முறையாக புது டெல்லி முதல் சென் பிரான்சிஸ்கோ வரை பயணிக்க உள்ள எயார் இந்தியா விமானம் வடதுருவத்தின் மேலாக பறக்க உள்ளது. இந்த மாத இறுதியில் குறித்த விமான சேவை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் வடதுருவத்தின் மேலாக பறக்க விரும்பும் விமான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து புதிதாக உருவாகியுள்ள வடதுருவ மார்க்கத்தில் பயணிக்க எயார் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

தற்போது புது டெல்லியிலிருந்து பங்களாதேஷ், மியான்மார், சீனா மற்றும் ஜப்பான் வழியாக பசிபிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்காவை 17 மணி நேரத்தில் சென்றடைகிறது ஏர் இந்தியா விமானம்.

ஆனால், வடதுருவத்தின் மேலாக பறக்கும் போது இந்த பயண நேரம் 90 நிமிடங்கள் குறைந்து 15.5 மணித்தியாலங்களில் குறித்த விமானம் அமெரிக்காவை சென்றடையும்.

வடதுருவத்தின் மேல் பறக்கும் போது புது டெல்லியிலிருந்து கிரிகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, ஆர்டிக் பெருங்கடல், கனடா வழியாக விமானம் அமெரிக்காவை சென்றடையும்.

அந்த வகையில் குறித்த பயணத்திற்கான தூரம் 12ஆயிரம் கி.மீற்றரில் இருந்து எண்ணாயிரம் கி.மீ ஆகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.