தேசிய வருமானத்திற்கு வடக்கிலிருந்து கிடைக்கும் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பிரச்சன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
யாழில் நடைபெற்ற ஜப்னா எடிசன் 2023 கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இந்தக் கண்காட்சியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டின் தேசிய வருமானத்தில் 46 வீதமானவை மேல்மாகாணத்திலிருந்தே கிடைத்து வருகின்றன.
தென் மாகாணத்திலிருந்து 10.8 வீதம் கிடைக்கின்றன.
ஊவா மாகாணத்திலிருந்தும் வடக்கை விட அதிகமான வருமானங்கள் கிடைக்கின்றன. ஆனால், வடமாகாணத்திலிருந்து 4 வீதமான வருமானமே கிடைக்கிறது.
இந்த மாகாணத்திற்காக அரசாங்கம் பல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. நீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இங்கே இருக்கிறது.
சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன்களைப் பெற்று, நாட்டை அபிவிருத்தி செய்வதைவிட எமது உற்பத்தி பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமது அயல் நாடான இந்தியாவில், அந்நாட்டின் சனத்தொகையில் 14 வீதமானோர் கைத்தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.
37 வீதமாக தொழிற்சாலைகள் அங்கு காணப்படுகின்றன. வியட்நாமை பொறுத்தவரை, அந்ந நாடும் பொருளாதார ரீதியாக உயர்ந்து வருகிறது.
இவற்றை இலக்காகக் கொண்டு, நாம் எமது உற்பத்திகளை ஊக்குவித்து, முன்னோக்கி பயணிக்க வேண்டும்.
யுத்தம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம். இவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும்- என்றார்.