Reading Time: < 1 minute

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்புடன் இணைந்து முதலுதவிப் பயிற்சிகளை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் நடத்த தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சங்கம் மற்றும் பிரிகேட் உடன் இணைந்து, முதலுதவிப் பயிற்சிகளை கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடத்தியது.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்புடன் இணைந்து முதலுதவிப் பயிற்சிகளை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் நடத்த தீர்மானித்துள்ளது.

இதன் முதற் கட்டமாக முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் வசதி வாய்ப்புக் குறைந்த சிறார்களுக்கு உயிர்காக்கும் திறன்களை வழங்குவதற்கான முதலுதவிப் பயிற்சிகள் கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டன.
ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சங்கம் மற்றும் பிரிகேட் உடன் இணைந்து ஒருங்கிணைந்த முயற்சியாகவே இந்த பயிற்சி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி அமர்வில், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் அருகிலுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பல பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு முதலுதவி தொடர்பான அறிவின் முக்கியமான தேவையை நிவர்த்தி செய்வதே இந்த முயற்சி அமர்வின் பிரதான நோக்கமாகும்.

CPR மற்றும் காயங்களை முகாமை செய்தல் மற்றும் பொதுவான அவசர மருத்துவத் தேவைகளைக் கையாளுதல் அடங்கலான‌ அடிப்படை முதலுதவி நுட்பங்கள் தொடர்பாக இந்தப் பயிற்சி அமர்வில் கற்பிக்கப்பட்டது.

முதலுதவிப் பயிற்சியானது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு முக்கியம் என்பது மட்டுமல்லாமல், தனிநபர்கள் தங்கள் சமூகங்களுக்குள் மாற்றத்தின் முகவர்களாக மாறவும் உதவுவதாக லைக்கா ஞானம் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த உன்னதமான முயற்சியில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையுடன் ஒத்துழைப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அசோசியேசன்ஸ் & பிரிகேட்டின் பிரதிநிதி கூறினார்.

வசதி வாய்ப்புக் குறைந்த‌ சிறார்களுக்கு முதலுதவிப் பயிற்சியை வழங்குவதன் ஊடாக, அவர்களின் சொந்தப் பாதுகாப்பு அதிகரிப்பது மட்டுமன்றி, சமூகப் பொறுப்புணர்வும் அவர்களிடத்தில் வளர்க்கப்படுவதாக அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

இந்த முதலுதவிப் பயிற்சித் திட்டமானது நலிவடைந்த மக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இந்த‌ இரு நிறுவனங்களும் கொண்டுள்ள‌ அர்ப்பணிப்பைக் கோடிட்டுக் காட்டுவதாக இதில் கலந்து கொண்டிருந்தோர் கருத்து வெளியிட்டனர்.

லைக்கா குழுமத்தின் ஸ்தாபகத் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனும் அவரது மனைவியாரான லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனும் இணைந்து, அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயாரான திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் உலகிலுள்ள வசதி குறைந்த சமூகங்களுக்கு உதவுவதற்காக 2010 ஆண்டு யூன் மாதத்தில் ஞானம் அறக்கட்டளையை ஸ்தாபித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.