ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் உள்ள வீடு ஒன்று வெடித்து எரிந்த சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்ததுடன், சுமார் நூறு வீடுகளில் இருந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனம் ஒன்று வீடு ஒன்றின் மீது மோதி, அதன் எரிவாயு வினியோக குழாயையும் மோதியதில் இந்த வெடிப்பு சம்பவித்துள்ளது. இதன்போது ஏற்பட்ட தீ அருகே இருந்த மேலும் சில வீடுகளுக்கும் பரவியுள்ளது.
வாகனம் மோதிய வீடு, எரிவாயு வினியோக வழி வெடித்து எரிந்தததில் முற்றாக அழிவடைந்து விட்டதாகவும், எனினும் அந்த வீட்டில் அந்த வேளையில் எவரும் இருக்காமையால் உயிர் உடற் சேதங்கள் எவையும் ஏற்படவிலலை என்றும் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் வெடிப்பு நிகழ்ந்த அந்த வீட்டின் தரைப்பகுதியில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இதனைச் சற்று பாரிய வெடிப்பாகவே நேக்கவேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் காயமடைந்த நான்கு தீயணைப்பு படையினரும், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும், ஒரு பொதுமகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் தீயணைப்பு படை வீரர் ஒருவருக்கு பாரதூரமான காயங்கள் எனவும், ஏனையோருக்கு சிறிய காயங்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், விதிமுறைகளுக்கு முரணாக வாகனத்தைச் செலுத்தியதான குற்றச்சாட்டில் டானியல் அலெக்ஸசான்ரா லெய்ஸ் என்ற 23 வயதுப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
இந்த வெடிப்பினால் அருகே இருந்த ஏழு வீடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுவட்டாரத்தில் இருந்த சுமார் 100 வீடுகளில் இருந்தோர் வெளியேற்றப்பட்டதாகவும், நேற்று பிற்பகல் வேளையில்தான் தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.