கனடாவின் ரொறன்ரோ நகரில், பொலிஸ் வாகனத்தில் சாரதி ஆசனத்தில் தூங்கிய நிலையில் கண்டறியப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது போதையில் வாகனம் செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறன்ரோ பொலிஸ் சேவையின் 55 ஆம் பிரிவின் இன்ஸ்பெக்டரான 51 வயதான மைக் ஹேல்ஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியளவில், லீசைட் பகுதியிலுள்ள எக்ளிங்டன் அவென்யூ மற்றும் லேர்ட் டிரைவ் சந்திப்புக்கு அருகில், பொலிஸ் அடையாளங்கள் அற்ற உத்தியோகபூர்வ வாகனத்தினுள் சாரதிப் பிணைப்பில் இவர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர் பணியில் இருக்கவில்லை என ரொறன்ரோ பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு மது அருந்தி வாகனம் செலுத்தியமை ஆகிய இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
30 ஆண்டுகள் பொலிஸ் சேவையில் அனுபவம் கொண்ட மைக் ஹேல்ஸ், 55 ஆம் பிரிவின் இரண்டாவது உயர்மட்ட அதிகாரியாவார். தற்போது அவர் ‘சமூக பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சட்டத்தின்’ கீழ், சம்பளத்துடனான பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மைரன் டெம்கிவ்: “ரொறன்ரோ பொலிஸ் சேவையின் எந்தவொரு உறுப்பினரும், அவர் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
எமது உறுப்பினர்கள் பணியில் இருக்கும் போதும், இல்லாத போதும் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தைப் பேண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பது நியாயமானது.” “குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், வழக்கின் குறிப்பிட்ட விவரங்கள் குறித்து நான் கருத்து தெரிவிப்பது பொருத்தமாக இருக்காது.
எனினும், சம்பவத்தின் போது அதிகாரி மைக் ஹேல்ஸ் பணியில் இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். பொலிஸ் அதிகாரி ஒருவர் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, சட்டத்திற்கு உட்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.