Reading Time: < 1 minute

ரொறன்ரோவின் கீல் (Keele Subway) சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து ஆண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் தெரிவிக்கையில், கீல் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பலத்த காயங்களுடன் ஒருவரை மீட்டுள்ளனர். தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினரின் உதவியுடன் அவரை செயின்ட் மைக்கேல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த நபர் காயங்கள் காரணமாக, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவயிடத்தில் இருந்து மாயமான தாக்குதல்தாரி தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.