ரொறன்ரோவில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
எக்ளிண்டன் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வியாழனன்று மதியம் 2 மணிக்கு பின்னர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தொடர்புடைய குடியிருப்பினுள் பொலிசாரை ஒருவர் அனுமதிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த பொலிசார், ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை உடற்கூராய்வு முன்னெடுக்கப்பட்டு, குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ள ரொறன்ரோ பொலிசார், குறித்த நபரை அடையாளம் கண்டுள்ளனர். ரொறன்ரோ பகுதியில் வசித்து வந்த இந்தியரான 28 வயது இந்தர்பிரீத் சிங் மங்கட் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 30 வயதான Theodore Ramsey என்பவரை கைது செய்துள்ள ரொறன்ரோ பொலிசார், அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். டிசம்பர் 23ம் திகதி பகல் 9 மணிக்கு Theodore Ramsey நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட உள்ளார்.
இந்த கொலை வழக்கு தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், உடனடியாக விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.