ரொறன்ரோவில் இரண்டு வெவ்வேறு பாடசாலைகளில் இரண்டு கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு பதிவாகியுள்ளதாக, ரொறன்ரோ கத்தோலிக்க மாவட்ட பாடசாலை சபை அறிவித்துள்ளது.
செயின்ட் பசில்-தி-கிரேட் கல்லூரி பாடசாலையில் ஒரு ஊழியர் உறுப்பினரும், ஜெரால்ட் கத்தோலிக்க பாடசாலையில் மாணவர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளுது.
புனித பசிலில் பணியாற்றும் உறுப்பினர் பாடசாலை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பு செப்டம்பர் 11ஆம் திகதி அன்று பாடசாலையில் கடைசியாக இருந்தார். செயின்ட் ஜெரால்டில் உள்ள மாணவர் கடைசியாக செப்டம்பர் 17ஆம் திகதி பாடசாலையில் பயின்றார்.
இதுகுறித்து ரொறன்ரோ கத்தோலிக்க மாவட்ட பாடசாலை சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த குழுவில் 20க்கும் குறைவான மாணவர்கள் இருந்தனர். ரொறன்ரோ பொது சுகாதார நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதத்தை அந்த குறிப்பிட்ட குழுவில் உள்ள அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு பாடசாலைகளிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதனையடுத்து, தற்போது பாடசாலைகள் திறந்த நிலையில் உள்ளன.