கனடாவின் ரொறன்ரோவில் உள்ள நார்த் யார்க் பகுதியில் வெள்ளி இரவு இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஷோர்ஹாம் டிரைவ் சந்திப்பிற்கு அருகே இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, ரொறன்ரோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவரைக் கண்டறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர் ஆபத்து எதுவுமில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு குழுக்கள் பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் அனைவரும் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாகத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் நடந்த சுற்றுவட்டாரப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான பல்வேறு ஆதாரங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள் யாரேனும் இருந்தால் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு ரொறன்ரோ பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.