ஒன்ராறியோ மாகாணம் – ரொரண்டோ, சன்னிபிரூக் மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவும் பணிகளில் கனேடிய இராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர்.
மருத்துவமனையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் கனேடியப் படையினரின் உதவிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கூட்டுப் படையணியில் அங்கம் வகிக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய 34 பேர் முதல்கட்டமாக மருத்துவமனை பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒரு அருமையான பணி. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் எங்கள் அணியினர் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட கனேடியா்களுக்கு உதவ எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது என இராணுவ உதவிப் படையணிக்கும் தலைமை தாங்கும் கட்டளை அதிகாரி ஃபிரான்ஸ் கிர்க் கூறினார்.
ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா தொற்று நோய் நெருக்கடி அதிகரித்து மருத்துவமனைகள் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் உதவிப் பணியில் கனேடியப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.