Reading Time: < 1 minute

பிரேசிலில் பரவிவரும் கொரோனாவின் புதிய திரிபு வைரஸ் கனடாவில் முதன்முறையான ரொரண்டோ நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ரொரண்டோ பொது சுகாதாரத் துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேசிலில் இருந்து ரொரண்டோ வந்த ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் பிரேசிலில் பரவும் பி.-1 திரிபு (P.1 variant) தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் தற்போது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் ரொரண்டோ பொது சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தென்னாபிரிக்காவில் பரவிவரும் பி .1.351 என அழைக்கப்படும் புதிய திரிபு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இருவர் சமீபத்தில் ரொரண்டோவில் அடையாளம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவர்களில் ஒருவர் எந்தவித வெளிநாட்டுக் பயணங்களிலும் ஈடுபடவில்லை. அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வந்த எவருடனும் தொடர்புகளையும் பேணவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, சமூகத்துக்குள் இருந்தே இவருக்கு தொற்று பரவியுள்ளதாகக் கருதப்படுகிறது.

தென்னாபிரிக்கா மற்றும் பிரேசிலில் பரவிவரும் இவ்வகையான புதிய கொரோனா திரிபு வைரஸ்கள் வேகமாகப் பரவக் கூடியவை என சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக ரொரண்டோ பொது சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திரிபு வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது. அத்துடன், இது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் திறனைப் பாதிக்குமா? என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது எனவும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, பிரித்தானியாவில் பரவி வரும் பி .1.1.7 திரிவு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் 174 பேர் ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தப் புதிய திரிபு மார்ச் மாதத்துக்குக்குள் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தும் எனக் கருதுவதாக ஒன்ராறியோ மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கொரோனா புதிய திரிபு தொற்று பரவலைக் கட்டப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாடுகள் அங்கு கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.