Reading Time: < 1 minute

ரொரன்ரோ பெரும்பாகத்தில் ஒரு சில மணி நேர இடைவேளையில் இடம்பெற்ற பல்வேறு தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் படுகாயமடைந்த நான்குபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுள் இரண்டு சம்பவங்கள் திங்கள் பின்னிரவு வேளையில் இடம்பெற்றுள்ளன. Kipling Avenue மற்றும் Mount Olive வீதிப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் இரவு 10:40 அளவில் இரண்டுபேர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கான இருவரும் தாங்களாகவே மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்ததாகவும், அவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள் என்று நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முதலாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று சுமார் பத்து நிமிடங்களின் பின்னர், Weston வீதி மற்றும நெடுஞ்சாலை 401 பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் பிறிதொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதில் 61 வயது ஆண் ஒருவர் படுகாயமடைந்ததாகவும், ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் துப்பர்ககிச் சூட்டுச் சம்பவம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க கறுப்பு இன ஆண் ஒருவரைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் இன்று அதிகாலை ஒரு மணியளவில், பிரம்டன் Matthew Harrison Street பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின் போது படுகாயமடைந்த ஆண் ஒருவர் அவசர மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுகிறது.