உக்ரைன் போர் தொடங்கியதை அடுத்து கனடாவினால் பறிமுதல் செய்யப்பட்ட பிரம்மாண்ட சரக்கு விமானத்தின் உரிமையாளரான ரஷ்ய விமான நிறுவனம் தாக்கல் செய்த தடை நிவாரண மனுவை கனடாவின் மத்திய அரசாங்க நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.
ரஷ்யாவின் மிகப்பெரிய சரக்கு விமான நிறுவனமான ‘வோல்கா டினெப்ர் ஏர்லைன்ஸ்’, நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தொடர்வதற்கான கனேடிய கூட்டாட்சி அரசின் முடிவை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
2018 ஆம் ஆண்டு முதல் இராணுவப் பொருட்களை ஏற்றிச் செல்வதை நிறுத்திவிட்டதாகக் கூறி, 2023 ஆம் ஆண்டில் கனடாவின் தடைப் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்குமாறு அந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
எனினும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ரஷ்ய அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்கள் மூலம் இந்த நிறுவனம் பலனடைந்துள்ளதாகவும், அதிபர் விளாடிமிர் புடினின் அரசு மீதான தடைகளை மீற உதவியதாகவும் கனேடிய அரசு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான ‘அன்டோனோவ்-124’ ரக மிகப்பெரிய சரக்கு விமானத்தை கனடா பறிமுதல் செய்தது. அந்த விமானம் இதுவரை அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சர்வதேச மத்தியஸ்த செயல்முறை மூலமாக அந்தச் சரக்கு விமானத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற அந்நிறுவனம் முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.