Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுக்கு 81 வயது ஆகிறது. தன் வயது காரணமாக, சில நேரங்களில் அவர் சிலருடைய பெயர்களை மறந்துவிடுவதுண்டு. அதனால் அவர் கேலிக்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், பைடனை அவ்வப்போது வம்புக்கிழுப்பதுண்டு.

இந்நிலையில், கனடா பிரதமர், தவறுதலாக போரில் ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று உளறிக்கொட்டியதால், இணையத்தில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவருகிறார்.

சமீபத்தில், உக்ரைனுக்கு கனடா வழங்கிய உதவிகள் குறித்து ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் விவரித்துக்கொண்டிருந்தார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.

அப்போது அவர், நமக்குத் தெரியும், போரில் ரஷ்யா வெற்றி பெற்றேயாகவேண்டும் என்று கூறினார். அதாவது, போரில் உக்ரைன் வெற்றி பெற்றேயாகவேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக, தவறுதலாக ரஷ்யா வெற்றி பெற்றேயாகவேண்டும் என்று கூறிய ட்ரூடோ, உடனடியாக தனது தவறைத் திருத்திக்கொண்டு, மன்னிக்கவும், ரஷ்யாவுக்கெதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற்றேயாகவேண்டும் என்று கூறினார்.

ட்ரூடோ பேசியதைப் பிடித்துக்கொண்ட இணையவாசிகள் அவரை கடுமையாக கேலி செய்துவருகிறார்கள். இவர்தான் ஜோ பைடன் 2.0 என ஒருவர் விமர்சிக்க, மற்றொருவரோ, ட்ரூடோ தன் மனதிலுள்ள விருப்பத்தை வெளியே கொட்டிவிட்டார் என்கிறார்.

ட்ரூடோ, போரில் ரஷ்யா வெற்றி பெற்றேயாகவேண்டும், மன்னிக்கவும், ரஷ்யாவுக்கெதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற்றேயாகவேண்டும் என்று கூறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.