Reading Time: < 1 minute

உக்ரைன் மீதான போர் தொடர்பில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுடன் நெருக்கமானவர்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் மீதும் பொருளாதார தடைகளை விதிக்க கனடா மீண்டும் தயாராகியுள்ளது.

இந்த முறை, ரஷ்யாவுக்கு நெருக்கமான 9 பேர்கள் மீதும் பெலாரஸ் நாட்டுக்கு நெருக்கமான 9 பேர்கள் மீதும் கனடா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தடைகள் விதிக்கப்பட்டவர் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என கனடா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், உக்ரைன் மற்றும் அதன் மக்களுக்கு அளிக்கப்பட்டுவரும் உதவிகள் தொடரும் என்றே கனடா உறுதி செய்துள்ளது. தடை விதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் இதுவரை எவரையும் அடையாளப்படுத்தப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர், இதுவரை பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது கனடாவும் அதன் நட்பு நாடுகளும் விதித்து வருகின்றது.

இருப்பினும், இதுவரை போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை. புச்சா பகுதியில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம் அம்பலமான நிலையில், உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், போர் குற்ற நடவடிக்கைகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உட்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் ரஷ்ய துருப்புகளால் கொடூரமாக தொடர்ந்து கொல்லப்படுவதை கனடா வேடிக்கை பார்க்காது எனவும், உக்ரைனில் சர்வதேச சட்ட மீறல்கள் விசாரிக்கப்படுவதையும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதையும் உறுதி செய்வதற்கான எந்த வாய்ப்பையும் கனடா தவற விடாது என அரசாங்கம் சார்பில் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.