ரஷ்யா சைபர் தாக்குதல்களை முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக வெளியான இரகசிய தகவலை அடுத்து கனேடிய அரசாங்கம் உயர் எச்சரிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் பொதுப் பாதுகாப்புக் குழுவில் பங்கேற்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும், இந்த அச்சுறுத்தல் பெடரல் அரசுக்கு மட்டுமல்ல, மாகாணங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கும் உள்ளது என்று அவர் குழு உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், ரஷ்யா போன்ற அரசுகளின் சாத்தியமான தாக்குதல்களுக்கு நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கும் தேவை இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த தாக்குதல்கள் சைபர் தாக்குதல்கள் மற்றும் ransomware வடிவில் வரக்கூடியவை என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடிய முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் அரசாங்கங்கள் சமீபத்திய ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.