உலக சாதனைக்கும், வீரதீர செயல்களுக்கும் வயதோ, தோற்றமோ தடையல்ல என்பதை பிரித்தானியாவைச் சேர்ந்த 77 வயதான பெண்ணொருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
ஜீன் சோக்ரடீஸ் (Jeanne Socrates) என்பவர் தன்னந்தனியாக, இடையில் எங்கும் தங்காமல், யாருடைய உதவியும் இன்றி உலகத்தை சுற்றிவந்த படகோட்டி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த வருடம் ஒக்ரோபர் 3 ஆம் திகதியில் இருந்து இந்த மாதம் 7 வரையான 330 நாள்களைத் தனியே கடலில் கழித்த அவர் கனடாவின் விக்டோரியா துறைமுகத்தைச் சென்றடைந்தார். தனது வெற்றிப்பயணம் பல சவால்கள் நிறைந்ததாக இருந்து என்று ஜீன் தெரிவித்துள்ளார்.

படகின் ரேடார் தொடர்புக் கருவி, திரைச்சீலை போன்றவை சேதமடைந்துள்ளன. பயணத்தின் இடையில் எதிர்கொண்ட சூறாவளியின் போது படகில் பொருத்தப்பட்டிருந்த சூரிய சக்தித் தகடுகள் கடலில் விழுந்துள்ளன.

எனினும், தடைகளைத் தாண்டி சாதனை படைத்த அந்தப் பெண்மணி, தனது பயணத்தை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் நிறைவுசெய்ததாக கூறியுள்ளார்.
