கனடாவில் ஒன்ராறியோவில் வசிக்கும் முதியவர் ஒருவரிடம் இருந்து 800,000 டொலர் தொகை மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்கள் மிக கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த மோசடி விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட நபரை கடந்த ஆகஸ்டு மாதம் தொலைபேசி ஊடாக ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், தாம் பங்கு பத்திரங்களை விற்கும் ஒரு நிதி நிறுவனத்தின் ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது விளக்கத்தை நம்பிய ஒன்ராறியோ முதியவர் மூன்று கட்டங்களாக மொத்தம் 800,000 டொலர் தொகையை செலுத்தியுள்ளார். நவம்பர் மாதம் பெருந்தொகை கைக்கு வரவிருப்பதாகவும் அந்த முதியவர் நம்பியுள்ளார்.
இந்த நிலையில், உரிய நிறுவனத்தை தொடர்புகொண்டு, நவம்பர் மாதம் தமக்கு வரவேண்டிய தொகை தொடர்பில் விசாரித்த நிலையில், முதியவருக்கு அது மோசடி என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அந்த நிறுவனமே பொலிசாருக்கும் நடந்தவற்றை எடுத்துக்கூறி புகார் அளித்துள்ளனர். தற்போது ஒன்ராறியோ பிராந்திய பொலிசார், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் விழிப்புடன் செயல்படவும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், முதியவர் ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.