Reading Time: < 1 minute

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தமையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாளில் போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் உட்பட, கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் பல ஆண்டுகால போரினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நாம் நினைவுகூருகிறோம் என கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை முன்னிட்டுப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

போரில் தப்பிப் பிழைத்தோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், இந்தப் போர் ஏற்படுத்திய வலியுடனும் பாதிப்புடனும் வாழும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.

பன்னிரெண்டு வருடங்களின் பின்னர், இந்தப் போரின் காயங்களும், தழும்புகளும் நீடிப்பதுடன், தப்பிப்பிழைத்தோரும், துன்பத்தை எதிர்கொள்வோரும், இழப்பைச் சந்தித்தோரும், அதிர்ச்சிக்குள்ளானோரும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புக்குரியோர் எங்குள்ளார்கள், அவர்களது நிலை என்ன போன்ற கேள்விகளுக்குத் தற்போதும் பதிலைத் தேடுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான “தகவல்களையும், சான்றுகளையும் சேகரித்து, ஒன்றுதிரட்டி ஆராய்வதற்கு” மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளருக்கு மார்ச் மாதம் ஆணை வழங்கியது. இந்த மனித உரிமைப் பேரவையின் மையக் குழுவில் கனடாவும் இடம்பெற்றிருந்தது.

முரண்பாடுகளுக்கு அடிப்படையாக விளங்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைக் காணுமாறு கனடா இந்த நினைவு நாளில் இலங்கை அரசிடம் மீளவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. அர்த்தமுள்ள பொறுப்புக் கூறல் நடைமுறை ஒன்றுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிப்பதுடன், நாட்டின் நீண்டகால அமைதிக்கும் செல்வச் செழிப்புக்கும் இன்றியமையாத – நீதி, மீளிணக்கம், அனைவரையும் உள்வாங்குதல் ஆகியவற்றுக்குச் செயற்படும் அனைவருக்கும் ஆதரவை வழங்குவோம்.

தமிழ்க் கனேடியர்கள் எமது நாட்டுக்குத் தொடர்ந்து வழங்கிவரும் முக்கிய பங்களிப்புக்களையும், அவர்கள் கடந்து வந்த இன்னல்களையும் புரிந்து கொள்வதற்கு இன்று நேரம் செலவிடுமாறு கனேடிய அரசின் சார்பாக அனைத்துக் கனேடியர்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.