கனடா நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் நேரடி விவாதம் முற்கூட்டிய தோ்தல் அறிவிப்புக் குறித்த விமர்சனங்களை அதிகளவில் எதிர்க்கட்சிகளிடம் இருந்து தூண்டிய அதேவேளை, இதனை நியாயப்படுத்தும் வகையில் லிபரல் கட்சித் தலைவரும் கனேடியப் பிரதமருமான ஜஸ்ரின் ட்ரூடோ வாதிட்டார்.
கனேடிய நாடாளுமன்றத் தோ்தல் செப்டம்பர் 20-ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்னரான முக்கிய கட்சித் தலைவர்கள் பங்கேற்ற முதல் பிரெஞ்சு மொழி விவாதம் கனேடிய நேரப்படி வியாழக்கிமை இரவு இடம்பெற்றது.
இந்த விவதத்தில் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் தோ்தலை அறிவித்தமை குறித்து லிபரல் தலைவர் ட்ரூடோவை விவாதத்தில் பங்கேற்ற எதிர்கட்சிகளில் 3 தலைவர்களும் கடுமையாக விமர்சித்தனர். எனினும் இதனை மறுத்த பிரதமர் ட்ரூடோ, தோ்தலுக்கான அவசியத்தை வலியுறுத்தி தனது வாதத்தை முன்வைத்தார்.
தொற்றுநோயிலிருந்து மக்களையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க லிபரல் அரசாங்கம் பில்லியன் கணக்கான டொலர்களை செலவழிப்பது சரியானதா? இல்லையா? என்பதையும் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் போரில் தனது தலைமையிலான அரசு தொடர்ந்து முன்னணியில் இருக்க வேண்டுமா? என்பதையும் கனேடியர்கள் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்து பிரதமர் ட்ரூடோ தோ்தல் அறிவிப்பை வெளியிட்டார்.
ட்ரூடோவின் தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி கனடாவில் சிறுபான்மை அரசாங்கத்தையே கொண்டிருந்தது. இந்நிலையில் சட்டவாக்கம் உள்ளிட்ட அனைத்து அரசின் செயற்பாடுகளையும் முன்னெடுக்க எதிர்க்கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே ட்ரூடோ தனது அரசைக் கலைத்து மக்கள் ஆணை கோரி தோ்தலை அறிவித்தார்.
இந்நிலையிலே தோ்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புக்கள் லிபரல் கட்சிக்கும் பிரதான எதிர்க் கட்சியான எரின் ஓ டூல் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிவிக்கின்றன.
தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. பல்வேறு திட்டங்களை செயற்படுத்த வேண்டியுள்ளது. போதிய பெரும்பான்மை இன்றி இவை சாத்தியம் இல்லை. இந்நிலையில் கனேடியர்கள் அடுத்து எதனை விரும்கிறார்கள்? என அவர்களிடம் ஆணை பெறவே முன்னதாகவே தோ்தலை அறிவித்ததாக விவாதத்தில் பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தினார்.
ஆனால் தொற்று நோய் நெருக்கடி தீவிரமாக உள்ள நிலையில் இது தோ்தலுக்கான நேரம் இல்லை எரின் ஓ’டூல் பதிலளித்தார்.
தற்போதைய நாடாளுன்றம் எளிதாக நான்கு ஆண்டுகள் நீடித்திருக்க முடியும். இந்த நிலையில் தோ்தல் அறிவிப்பு தேவையற்றது என பிளாக் கியூபெகோயிஸின் தலைவரான யெவ்ஸ்-ஃபிராங்கோயிஸ் பிளான்செட் கூறினார்.
மீண்டும் ஒரு சிறுபான்மை அரசு அமைந்தால் 18 மாதங்களில் மீண்டும் மற்றொரு தோ்தல் வரலாம். இது 19 ஆண்டுகளில் இடம்பெறும் 8-ஆவது பொதுத் தோ்தலாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதமர் ட்ரூடோவின் கருத்தும் செயற்பாடுகளும் மற்றக் கட்சிகளுடன் இணைந்து செயலாற்ற விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது என என்.டி.பி. தலைவர் ஜக்மீத் சிங் விமர்சித்தார். சிறுபான்மை லிபரல் அரசை தமது கட்சி பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆதரித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.