கனடாவின் முதல் உண்மை மற்றும் நல்லிணக்க தினத்தில் குடியிருப்புப் பள்ளிகளில் பாதிக்கப்பட்டவர்கள் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்காமல் குடும்பத்துடன், விடுமுறையில் சுற்றுலா சென்றமை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பழங்குடித் தலைவர்களிடம் நேரில் மன்னிப்புக் கோரினார்.
உண்மை மற்றும் நல்லிணக்க தினம் செப்டம்பர் 30 ஆம் திகதி கனடாவில் அனுஷ்டிக்கப்பட்டது. எனினும் இந்த நிகழ்வில் பிரதமர் ட்ரூடே பங்கேற்கவில்லை.
நல்லிணக்க நிகழ்வுகளில் பங்குபற்றாது பிரதமர் குடும்பத்துடன் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு சென்று ஓய்வு எடுத்துக் கொண்டமை விமர்சனத்துக்குள்ளானது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறார்கள் வதிவிடப்பாடசாலைகளில் துன்புறுத்தப்பட்ட சம்பவங்களை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்வு கனடா முழுவதும் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே பிரிட்டிஷ் கொலம்பியாவில் பழக்குடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு திங்கட்கிழைமை விஜயம் செய்த கனடா பிரதமர், பழங்குடி மக்களிடம் மன்னிப்புக் கோரினார். நல்லிணக்க தின நாளில் நான் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்திருக்க வேண்டும். இல்லாததற்காக வருந்துகிறேன் எனவும் அவா் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகத்தினர், சா்ச்சைக்குரிய பழங்குடியின சிறுவர் குடியிருப்பு பள்ளிகளில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் குடியிருப்பு பள்ளி அமைப்பிலிருந்து காணாமல் போன சிறுவர்களிள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோரும் செப்டம்பர் -30 ஆம் திகதி உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான கனடாவின் தேசிய தினமாக பிரகடணம் செய்யும் அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசால் வெளியிப்பட்டது.
இந்நாள் தேசிய விடுமுறை தினதாக அறிவிக்கப்பட்டதுடன், இந்நாளை பழங்குடியின மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டது.
பழங்குடியின சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விசாரணை நடத்திய கனடா – உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, கடந்த 2015 முன்வைத்த 94 பரிந்துரைகளில் ஒன்றாக உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான கனடா தேசிய தின பிரகடணமும் ஒன்றாகும்.
கனடாவில் பல தசாப்தங்களாக நீடித்த குடியிருப்பு பள்ளி முறைமையின் கீழ் கலாசார இனப்படுகொலை இடம்பெற்றதாக 2015 ஆம் ஆண்டில், கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிவித்தது.
1870 முதல் 1990 களுக்கும் இடையில், 150,000 -க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் குடியிருப்புப் பள்ளிகளில் இணைய கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்தப் பள்ளிகள் தேவாலயங்களால் நடத்தப்பட்டன. பழங்குடி குழந்தைகளை வெள்ளை கனேடிய சமுதாயத்தில் வலுக்கட்டாயமாக இணைப்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறான பள்ளிகள் செயற்பட்டன.
குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, பழங்குடியின மக்களின் மொழிகளைப் பேச முடியாது தடை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இங்கு இணைக்கப்பட்ட குழந்தைகள் பலவிதமான உடல், உளவியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுத்தனர்.
அண்மைக் காலங்களில் கனடாவின் முன்னாள் குடியிருப்பு பள்ளி வளாகங்களில் சுமார் 1,000 வயைான பழங்குடிச் சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இது இந்த விவகாரத்தில் மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.