பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீன நிறுவனம் ஒன்றினை நம்பி 7.5 மில்லியன் கனேடிய டொலர்களை இழந்துள்ளார் பெண்மணி ஒருவர்.
இந்த விவகாரம் தொடர்பில், இதுவரை விசாரித்ததில் மிகப்பெரிய மோசடிகளில் இதுவும் ஒன்று என்று பொலிசார் கூறுகின்றனர். விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி, கிரிப்டோகரன்சி மோசடியில் குறித்த பெண்மணியை சிக்க வைத்து, அந்த தொகையை மீட்டுத்தருவதாக கூறி மேலும் மோசடி செய்துள்ளனர்.
கடந்த 2022 ஏப்ரல், மே மாதங்களில் குறித்த பெண்மணியை நாடிய ஒருவர், அவரது தனிப்பட்ட தொழில் வரலாறு குறித்து தகவல் தெரிந்துகொள்ள வந்ததாகவே அறிமுகமாகியுள்ளார்.
அதன் பின்னர் சில மாதங்களில் தொடர்புகொண்டு அவரது நம்பிக்கையை பெற்றுள்ளனர். மட்டுமின்றி தொழில் தொடர்பான கலந்துரையாடல் மட்டுமே முன்னெடுத்துள்ளனர்.
சீன மொழியில் பேசி, குறுந்தகவல், மின்னஞ்சல் என நட்பை வளர்த்துள்ளனர். இந்த நிலையில், அவர்களின் ஆலோசனையை நம்பிய கனேடிய பெண்மணி மில்லியன் டொலர்களை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளார்.
மேலும், தாம் முதலீடு செய்துள்ள தொகையை, அதனால் கிடைத்துள்ள அதிகமான வருவாய் என மொத்த கணக்கையும், அவர்கள் அளித்துள்ள செயலி ஊடாக இவர் சரிபார்த்தும் வந்துள்ளார்.
ஆனால் ஒருகட்டத்தில் அந்த செயலியில் இருந்து பணத்தை வங்கிக்கு மாற்ற முயன்ற அவருக்கு முசியாமல் போனது. இந்த நிலையில், முதலீடு செய்ய தூண்டியவர்களின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இணையமூடாக தொடர்புகொண்ட ஒருவர், இழந்த மில்லியன் கணக்கான டொலர் தொகையை மீட்டுத்தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய அந்த பெண்மணி, மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கினார்.
ஆனால் அதுவும் மோசடி என்பது பின்னர் தான் அவர் புரிந்து கொண்டுள்ளார். தற்போது 7.5 மில்லியன் கனேடிய டொலர்களை அவர் இழந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.