பைசர் தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மார்ச் மாத இறுதிக்குள் கனடாவுக்கு 40 இலட்சம் தடுப்பூசிகள் வந்துசேரும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்யும் புதிய அட்டவணையை பைசர் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
பைசர் தலைமை நிர்வாக அதிகாரி அல்பேர்ட் பவுர்லாவுடன் பேசி இதனை உறுதி செய்துள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
மார்ச் மாதத்துக்குள் கிடைக்கவுள்ள 40 இலட்சம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் தொடர்ந்து மேலதிக பைசர் தடுப்பூசிகளை விரைவாகப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
இதேவேளை, பைசர் தடுப்பூசிக்கு மேலதிகமாக மொடெர்னாவிலிருந்து தடுப்பூசிகளையும் விரைவாகப் பெற்றுக்கொள்ள கனடா நடவடிக்கை எடுத்துள்ளது. மொடர்னா உறுதியளித்ததை விட கூடுதலாக நான்கு மில்லியன் தடுப்பூசிகள் கோடை காலத்துக்கிடையில் கனடா வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜஸ்ரின் ட்ரூடோ கூறினார்.
ஒப்பந்தங்களின் பிரகாரம் 2021 இரண்டாம் காலாண்டின் முடிவில் கனடா மொத்தம் 23 மில்லியன் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும். செப்டம்பர் மாத இறுதிக்குள் மொத்தம் 84 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கும்.
கனடாவில் தடுப்பூசி போட விரும்பும் எவரும் செப்டம்பர் இறுதிக்குள் அதனைப் பெற முடியும் எனவும் கனடா பிரதமர் மீண்டும் உறுதியளித்தார்.