மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து நான்கு பேர் சடமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவரைத் தடுத்து வைத்துள்ளதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Mingay Avenueவுக்கு கிழக்கே, Castlemore Avenueவில் அமைந்துள்ள வீடொன்றில் பலர் காயமடைந்து இருப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தமக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அங்கே அந்த வீடடின் முகப்பு வாசலில் ஆண் ஒருவர் நின்றிருந்ததாகவும், வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கே நான்குபேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணங்களை சந்தேகத்திற்கிடமான சம்பவமாக வகைப்படுத்திய அதிகாரிகள், அங்கிருந்த அந்த நபரை விசாரணைகளுக்காக தடுத்து வைத்துள்ளனர். எனினும் அவரது பெயர் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிகள், மனிதக் கொலை தொடர்பிலான விசாரணையாளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவருக்கும் கொல்லப்பட்டவர்களுக்கும் எவ்வாறான தொடர்பு இருந்தது என்பது தொடர்பிலோ, கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் தொடர்பிலோ விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. எனினும் குறித்த அந்தப் பகுதியில் எதிர்வரும் சில நாட்களுக்கு காவல்துறையினரின் பிரசன்னம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.