உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து கனேடிய மக்கள் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மரணத்தின் பின்னர் உடல் உறுப்புக்கள் மற்றும் உடல் திசுக்களை தானமாக வழங்குவதனை பலரும் விரும்புகின்றனர்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 84 வீதமானவர்கள் மரணத்தின் பின்னர் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்படுவதனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
68 அல்லது மூன்றில் இரண்டு கனேடியர்கள் மரணத்தின் பின்னர் தங்களது உடல் உறுப்புக்களை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் 21 வீதமானவர்கள் இதனை விரும்பவில்லை என்பதுடன் 11 வீதமானவர்கள் எவ்வித தீர்மானமும் எடுக்காதவர்களாவர்.
எவ்வாறெனினும், மரணத்தின் பின்னர் தங்களது உறுப்பு மற்றும் திசுக்களை தானம் செய்வதற்காக பதிவு செய்து கொண்டதாக 43 வீதமானவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 25 வீதமான கனேடியர்களே உறுப்பு தானம் செய்வதற்காக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர் என கனேடிய அரசாங்கம் அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
55 வயதுக்கும் மேற்பட்ட கனேடியர்கள் மரணத்தின் பின்னர் உடல் உறுப்பு தானம் செய்யப்படுவதனை கூடுதலாக ஆதரித்துள்ளனர்.
கனடாவின் சில பிராந்தியங்களில் மரணத்தின் பின்னர் உடல் உறுப்பு தானம் செய்வது சட்ட ரீதியாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதுடன், உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பாதவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதிலிருந்து விலகிக்கொள்ள சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளது.