கனடாவில் பழங்குடி மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சுயாதீன விசாரணைக்கு பீஜிங் அழைப்பு விடுத்துள்ள நிலையில் சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பகிரங்க விசாரணை நடத்த சுயாதீனக் குழுக்களை அனுமதிக்க சீனா தயாரா? என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ சவால் விடுத்தார்.
“கனடாவில், இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் குறித்து விசாரிக்க நாங்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தோம். சீனாவில் அவ்வாறான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளதா? எனவும் பிரதமர் ட்ரூடோ கேள்வி எழுப்பினார்.
குடியிருப்பு பள்ளி அமைப்பின் வரலாறு மற்றும் தாக்கத்தை பழங்குடி மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது ஆவணப்படுத்தினர். விசாரணையில் கண்டறியப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆணைக்குழு பகிரங்கப்படுத்தியது.
எனினும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதாக சீனா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து உண்மையைக் கண்டறிய சுயாதீன கண்காணிப்பாளர்களை அனுமதிக்க சீனா மறுத்துவிட்டது எனவும் கனடா பிரதமர் ட்ரூடோ சுட்டிக்காட்டினார்.
சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இந்த மோதல் நேற்று செவ்வாய்க்கிமை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தொடங்கியது. கனேடிய அரசாங்கமும் 40 பிற நாடுகளும் இணைந்து சின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பகிரங்க, சுயாதீன விசாரணை நடத்துமாறு அழைப்பு விடுத்தன.
இதற்குப் பதிலளித்த சீனா தூதுவர், சீனா குறித்து விசாணை நடத்துவதற்கு முன்னர், கனடாவில் பழங்குடி மக்களுக்கு எதிராக துன்புறுத்தல்கள் குறித்துக் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
சீனாவின் சின்ஜியாங்கில் பிராந்தியத்தில் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு மில்லியன் உய்குர்களும் பிற துருக்கிய முஸ்லிம்களும் பெருந்தொகையில் காட்டாய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆா்வலர்கள் மற்றும் ஐ.நா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சிறுபான்மை சமூகங்கள் மீதான துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை சீனா மறுத்துள்ளது. அவை சட்டவிரோத தடுப்பு மையங்கள் இல்லை. அங்கு தொழிற்பயிற்சி அளிப்பதாக சீனா தெரிவித்து வருகிறது.
எனினும் சீனாவின் சமாதானங்களை ஏற்க மறுக்கும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள், அங்கு உய்குர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பிறப்பு வீதத்தை குறைப்பதில் சீன திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
அங்கு உய்குர்கள் மற்றும் பிற சிறுபான்மையின சமூகங்களின் பிறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டாய கருத்தடைக்கு வலியுறுத்தப்படுவதாக அவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.