இந்தியா, கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் முடிந்தபாடில்லை போல் தோன்றுகிறது.
இரு நாடுகளின் தூதர்களும் அமைதியாக பரஸ்பரம் பேசித் தீர்க்கவேண்டிய விடயங்களை வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் பேசி பிரச்சினையை பெரிதாக்கினார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
தூதரக உறவுகள் பாதிக்கப்பட்ட பின்னரும், இந்தியா வியன்னா ஒப்பந்தத்தை மீறி கனேடிய தூதர்களை வெளியேற்றியதாக இந்தியா மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார் ட்ரூடோ.
இந்நிலையில், மனித உரிமைகள் தொடர்பில் கனடா இன்னும் என்னென்ன செய்யவேண்டியுள்ளது என்பது குறித்து இந்தியா மட்டுமின்றி, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் கனடாவுக்கு பரிந்துரைகள் செய்த விடயம், ஐநாவின் மனித உரிமை கவுன்சில் மதிப்பாய்வுக் கூட்டத்தில் நிகழ்ந்தது.
இந்தியா
கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதையும் வன்முறையை தூண்டுவதையும் தடுப்பது, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் குழுக்களின் செயல்பாடுகளை அனுமதிக்காதது போன்ற விடயங்களை வலுப்படுத்தவும், மத மற்றும் இன சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களைத் திறம்படத் தடுக்கவும், வெறுப்புக் குற்றங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளைத் தீர்ப்பதற்கு சட்டமியற்றுதல் மற்றும் பிற நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், கனடாவுக்கு இந்தியா பரிந்துரைப்பதாக இந்திய தூதரான Mohammed Hussain பேசினார்.
இலங்கை
அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவும், இனப் பாகுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடரவும், குறிப்பாக, மருத்துவ சேவை முதலான, புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதிக்கும் பாரபட்சமான கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான தவறான தகவல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கவும், விரிவான அறிக்கையிடலுக்கான அதன் தேசிய பொறிமுறையை வலுப்படுத்துதல் மற்றும் சர்வதேச மனித உரிமை நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தக் கடமைகளிலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில், விளக்கமான அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும், அதற்குப் பிந்தைய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கான தனது தேசிய அமைப்பை வலுப்படுத்தவும், கனடாவுக்கு இலங்கை பரிந்துரைப்பதாக இலங்கை தூதரான Thilini Jayasekara பேசினார்.
பங்களாதேஷ்
இனவெறி, வெறுப்புப் பேச்சு, வெறுப்புக் குற்றங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தவும், கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் மற்றும் காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான தாக்கங்களை நிவர்த்தி செய்வதில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும். அனைத்து புலம்பெயர்ந்தோர், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்கவும், கனடாவுக்கு பங்களாதேஷ் பரிந்துரைப்பதாக பங்களாதேஷ் தூதரான Abdullah Al Forhad பேசினார்.