Reading Time: < 1 minute

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உலக தலைவர் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் கடந்த புதன்கிழமை பெரிஸ் நகரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான தனது சந்திப்பை தொடர்ந்து கருத்து வெளியிட்ட கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதிபூண்டுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் வலுவான முன்னெடுப்புக்களை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க இந்த மாநாட்டின் பக்க அம்சமாக, பல அரச தலைவர்கள் மற்றும் பலதரப்பு இராஜதந்திர தலைவர்களை சந்தித்து பொருத்தமான விடயங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.