பொலிஸார் போல் நடித்து பொதுமக்களிடம் பணமோசடி செய்யும் கும்பலொன்று தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் பொலிஸ் போல தம்மைக் கூறிக்கொள்ளும் அவர்கள், தொலைபேசி ஊடாக மோசடியில் ஈடுபடுவதாகவும், பொலிஸாரிடருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது என்பதனை நம்பவைக்கும் வகையில், மக்களின் தொலைபேசிகளில் பொலிஸ் தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பு வருவது போன்ற தொழில்நுட்பத்தை அவர்கள் கையாள்வதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பணத்தையோ வரியையோ வருமான வரித்துறை வசூலிக்கும் செயற்பாட்டிலோ பொலிஸார், ஒருபோதும் ஈடுபடுவதில்லை எனவும், கனேடிய வருமான வரித்துறை ஒருபோதும் இந்த முறையில் பணத்தை வசூலிப்பதில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஒரு தொகையினை உடனயாகச் செலுத்துமாறும், இல்லாவிட்டால் நாடுகடத்தப்படுவீர்கள் என்றும் மேசடியாளர்களால் அச்சுறுத்தப்பட்டதை அடுத்து ஒருவர் 1,200 டொலர்களைச் செலுத்தியுள்ளதாகவும், அதேபோல பெண் ஒருவரிடம் அவரின் சமூக காப்புறுதி இலக்கத்தைப் பயன்படுத்தி, உடனடியாக பணத்தைச் செலுத்தாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தி அவரிடம் இருந்து ஆயிரம் டொலர்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரொறரன்ரோ பொலிஸார் விபரம் வெளியிட்டுள்ளனர்.
கனேடிய வருமான வரித்துறையினர் இவ்வாறு தொலைபேசி ஊடாக அழைத்து எச்சரிக்கும் பாணியில் அல்லது அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு பணம் கோருவதில்லை என்பதையும், அவர்கள் ஒருபோதும் கடனட்டைத் தகவல்களையோ, வங்கிக் கணக்குத் தகவல்களையோ, சமூக காப்புறுதி இலக்கங்களையோ கோருவதில்லை என்பதையும் பொலிஸார் தெளிவு படுத்தியுள்ளனர்.
அத்துடன் ஒருபோதும் தனிப்பட்ட தகவல்கள் மின்னஞ்சல் மூலமாகவோ, குறுந்தகவல் மூலமாகவோ கோரப்பட மாட்டாது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால், உடனடியாக அந்த அழைப்பினைத் துண்டித்துவிடுமாறும் பொலிஸார் பொதுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.