பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாடுகளின் அரசாங்கங்களை வலியுறுத்தி உலகளாவிய அளவில் பேராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், நேற்று கனேடிய நகரங்களில் உள்ள பிரதான பாலங்கள் ஊடான போக்குவரத்துகளும் போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டன.
அந்த வகையில் ஹலிஃபக்ஸ், ரொரன்ரோ, எட்மண்டன் வன்கூவர் ஆகிய நகரங்களில் உள்ள பிரதான பாலங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களான போராட்டக்காரர்களால் முடக்கப்பட்ட நிலையில், பின்னதாக கல்கரி மற்றும் விக்டோரியா ஆகிய இடங்களிலும் இதேமாதிரியான போராட்டங்கள் இடம்பெற்றதனை சமூக வலைத்தள தகவல்கள் காட்டுகின்றன.
ஐரோப்பிய நாடுகளின் நரகங்களில் இந்தப் போராட்டங்களில் பெருமளவானோர் திரண்ட நிலையில், கனேடிய நகரங்களில் அந்த அளவு எண்ணிக்கையில் மக்கள் திரளவில்லை என்ற போதிலும், கனேடிய நகரங்களில் இந்தப் போராட்டம் காரணமாக போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதால், போரட்டக் காரர்கள் வாகனமோட்டிகளின் கோபத்துக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
எனினும் அவ்வாறான போக்குவரத்து முடக்கங்களை ஏற்படுத்துவதே, இவ்வாறான போராட்டங்களின் உத்தி என்றும், எனினும் அதற்காக வாகனமோட்டிகளை குற்றஞ்சாட்டப் போவதில்லை எனவும் போராட்டத்தினை ஒழுங்குசெய்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை போக்குவரத்துகளை முடக்கிப் போராட்டங்களை முன்னெடுத்த சிலர் ஆங்காங்கே காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. எனினும் போராட்டங்கள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.