கனடாவில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் நடுப்பகுதியில் இருந்து பெரும்பாலான மாகாணங்கள் வணிக நிறுவனங்களையும், பொது இடங்களையும் மூடிவிட்டு மக்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டதன் பிரதிபலிப்பே இதுவென நிபுணர்கள் கூறுகின்றனர்.
காற்று மாசுபாட்டின் வரைபடங்கள் நைட்ரஜன் டை ஆக்சைட் அளவுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காட்டியுள்ளன.
ரொறன்ரோ, மொன்றியல் போன்ற நகரங்களில், நைட்ரஜன் டை ஆக்சைட் அளவு 30 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. எட்மண்டன் மற்றும் கல்கரியில், வீழ்ச்சி 40 சதவீதத்திற்கு அருகில் உள்ளது.
புதைபடிவ எரிபொருள்கள் மின்சாரம் மற்றும் வெப்ப வாகனங்கள் மற்றும் கட்டடங்களுக்கு எரிக்கப்படும் போது உற்பத்தி செய்யப்படும் முக்கிய வாயுக்களில் இதுவும் ஒன்றாகும்.
அத்துடன், கடந்த இரண்டு மாதங்களில் காற்றின் தரத்தில் ஏற்பட்ட சிறப்பான முன்னேற்றங்கள், ஆஸ்துமா மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களைக் குறைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டால் ஒவ்வொரு ஆண்டும் 14,000க்கும் மேற்பட்ட கனேடியர்கள் இறக்கின்றனர் என்று ஹெல்த் கனடா கடந்த ஆண்டு மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.