Reading Time: < 1 minute

சீனாவின் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை, இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் சமீபத்திய நாடுகளாக பிரித்தானியா மற்றும் கனடா மாறியுள்ளன.

சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்படுவதால் எந்த அமைச்சர்களும் பெய்ஜிங் ஒலிம்பிக்கில், கலந்து கொள்ள மாட்டார்கள் என பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கன்சர்வேடிவ் தலைவர் இயன் டங்கன் ஸ்மித், முக்கிய விளையாட்டு நிகழ்வை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்க வேண்டுமெ அழைப்பு விடுத்ததை அடுத்து நேற்று (புதன்கிழமை) பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மனித உரிமைக் கவலைகளை மேற்கோள் காட்டி கனடாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒட்டாவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இதுகுறித்து கருத்து தெரிவித்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘நாட்டின் புறக்கணிப்பு சீனாவுக்கு ஆச்சரியமாக இருக்காது’ என்று கூறினார்.

இந்த வார தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவின் இதே போன்ற அறிவிப்புகளுக்குப் பிறகு இது வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், சீனாவிற்கும் அவுஸ்ரேலியா, கனடா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பல இராஜதந்திர பிரச்சினைகளால் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

வர்த்தக போர், கொரோனா தோற்றம் என பல்வேறு விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகின்ற நிலையில், ஸின்ஜியாங்கின் மேற்குப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் உய்குர் சிறுபான்மையினரை ஒடுக்கியதில் சீனா இனப்படுகொலை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சீனா கடுமையாக மறுத்துள்ளது.