ஒன்றாரியோ, ரொறன்ரோ, கியூபெக் என பல்வேறு மாநிலங்களில் அதிர்ச்சிக் குற்றப்பின்னணியை கொண்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 300 இற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்தக் கும்பலின் கடத்தல் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முயற்சித்த இரண்டு பெண்கள் பொலிஸாரைத் தொடர்பு கொண்டதை அடுத்து, கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் இருந்து குறித்த இந்த விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதனடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் குறித்த அந்த இரண்டு பெண்களும் கியூபெக்கைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடத்தல் கும்பலால் அவர்கள் ஒன்றாரியோவுக்கு கொண்டுவரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதும், தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், குறித்த இந்தக் குழு ஜொனதன் ஞாங்விலா என்பவரின் தலைமையில் மாநிலங்கள் தழுவிய அளவில் பாரிய வலைப்பின்னலைக் கொண்டு இயங்குவதையும், பல பெண்களை இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதையும் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் குழுவால் குறைந்தது 45 பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் அனைவரும் 20 இலிருந்து 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் பல வழிகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.