புலம்பெயர்ந்தோரை மாகாணச் சிறையில் அடைக்கும் நடைமுறைக்கு முடிவுகொண்டுவர உள்ளதாக ஆல்பர்ட்டா மாகாணம் அறிவித்துள்ளது.
கனடாவுக்கு புலம்பெயர்வோர், அவர்கள் தொடர்ந்து கனடாவில் வாழ அனுமதிக்கப்படுவார்களா என்பது முடிவாகும் வரை, அவர்களை குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது.
புலம்பெயர்ந்தோரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும்வரை அவர்களை கனேடிய மாகாணங்களில் உள்ள சிறைகளில் அடைக்கும் வகையில் கனடாவின் எல்லை பாதுகாப்பு ஏஜன்சி மாகாணங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறது.
ஆனால், புலம்பெயர்வோரை குற்றவாளிகளுடன் சிறையில் அடைப்பது சரியா என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குரல்கொடுத்துவருகின்றன.
இந்நிலையில், இனி புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளுடன் சிறையில் அடைப்பதில்லை என முடிவு செய்துள்ளதாக ஆல்பர்ட்டா மாகாணம் முடிவு செய்துள்ளது.
ஆல்பர்ட்டா பொது பாதுகாப்பு மற்றும் அவசர சேவைகள் அமைச்சரான Mike Ellis இது குறித்து பேசும்போது, கனடாவுக்கு புது வாழ்வைத் தேடி வருவோரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும்வரை அவர்களை சிறையில் அடைப்பது சரியல்ல, புலம்பெயர்வோர் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்று கூறியுள்ளார்.
ஆகவே, புலம்பெயர்ந்தோரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும்வரை கனேடிய மாகாணங்களில் உள்ள சிறைகளில் அடைக்கும் வகையில் கனடாவின் எல்லை பாதுகாப்பு ஏஜன்சி மாகாணங்களுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இருக்கிறோம் என்றார் அவர்.
அத்துடன், மற்ற கனேடிய மாகாணங்களும் எங்களுடன் இணைந்து இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரவும் அழைப்பு விடுக்கிறோம் என்கிறார் அவர்.