புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனேடியர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை சமீபத்திய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
முன்பெல்லாம் அரசியல்வாதிகள்தான் புலம்பெயர்தலுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால், தற்போது கனேடிய மக்களின் எண்ணங்களும் புலம்பெயர்தலுக்கு எதிரானவையாக மாறிவருகின்றன.
Canadian Museum for Human Rights என்னும் அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், கனடாவுக்கு புதிதாக வருபவர்கள் மற்றும் அகதிகள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு மிக அதிக சலுகைகள் வழங்கப்படுவதாகவும் கனேடியர்கள் கருதுவது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் 2,500 கனேடியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 2023இல், அகதிகளுக்கும் புகலிடக்கோரிகையாளர்களுக்கும் மிக அதிக அளவில் சலுகைகள் வழங்கப்படுவதாக 49 சதவிகித கனேடியர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இந்த ஆண்டிலோ, அதாவது 2024இல், அந்த எண்ணிக்கை 56 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், புலம்பெயர்தல் கனடாவை சிறந்ததாக்குகிறது என கருதும் கனேடியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 52 சதவிகிதமாக இருந்தது, இந்த ஆண்டில் 44 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஒரு வீடியோவில், கிட்டத்தட்ட பிரச்சினைகளுக்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்பது போல பேசியிருந்தார்.
அந்த வீடியோவுக்கு புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இப்படி தொடர்ச்சியாக அரசியல்வாதிகள் புலம்பெயர்தல் குறித்து விமர்சித்துக்கொண்டிருப்பதே கனேடிய மக்களிடம் புலம்பெயர்ந்தோர் குறித்து எதிர்மறையான எண்ணங்கள் உருவாகக் காரணம் என்றும் கூறியுள்ளன.