கனடாவில் புலம்பெயர்தல் அமைப்பு ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடி எடுத்துவைக்க இருக்கிறது!
புலம்பெயர்வோரை வரவேற்கும் விடயத்தில், கூடுதல் கட்டுப்பாடுகளை தங்கள் வசம் வைத்துக்கொள்ள மாகாணங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பைப் பொருத்தவரை, பெடரல் அரசுதான் பெரும்பாலான விடயங்களைக் கட்டுப்படுத்துகிறது. மாகாணங்களின் பங்கு குறைவே. ஆனால், கியூபெக் மாகாணம் மட்டும் இந்த விடயத்தில் விதிவிலக்கு.
ஆம், 1991ஆம் ஆண்டு செய்யப்பட்ட கனடா – கியூபெக் ஒப்பந்தத்தின்படி, கியூபெக் மாகாணம் தனக்கான புலம்பெயர்தல் மட்டத்தை முடிவு செய்தல், தனது பொருளாதார வகுப்பு புலம்பெயர்வோரை தேர்வு செய்தல், தற்காலிக குடியிருப்பு அனுமதிகளை கட்டுப்படுத்துதல் ஆகிய விடயங்களைத் தானே கட்டுப்படுத்துவதுடன், குடும்ப மற்றும் அகதிகள் வகுப்புகள் தொடர்பிலும் சில விடயங்கள் குறித்து தனது முடிவுகளை தெரிவிக்கிறது.
மேலும், தனக்கு பெடரல் அரசு வழங்கும் புதிதாக வரும் புலம்பெயர்ந்தோரை குடியமரச் செய்வதற்குத் தேவையான நிதி மீதும் முழு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது கியூபெக் மாகாணம்.
இந்நிலையில், கியூபெக்கைப் போலவே தங்களுக்கும் தங்கள் மாகாண புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் அதிகாரம அளிக்கும் ஒப்பந்தம் ஒன்று தேவை என Saskatchewan, ஆல்பர்ட்டா, மனித்தோபாபா, ஒன்ராறியோ முதலான மாகாணங்களும் பெடரல் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விடயம் பெடரல் அரசுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.
ஆனால், ஏற்கனவே கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு குடியுரிமை தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலிக்கத் தடுமாறி வருகிறது.
தற்போது அதை சுட்டிக் காட்டியுள்ள மாகாணங்கள், தங்களுக்கும் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டால், இந்த பிரச்சினை விரைவாக தீர்க்கப்படலாம் என வாதம் ஒன்றை முன்வைத்துள்ளன.
ஆக, மாகாணங்கள் எடுத்து வைத்துள்ள இந்த துணிச்சலான அடி, கனடாவின் புலம்பெயர்தல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.