தமிழர் தாயகத்தின் மீது தனது தடங்களை ஆழப்பதித்துள்ள சிங்களப் பேரினவாதப்பூதம், தனது கோரப்பற்களைக் கொண்டு மக்கள் மீதான கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பினை எதிர்கொள்வதற்கான சவால் மிக்கதொரு ஆண்டாகவே மலர்ந்துள்ள இப் புத்தாண்டு அமையும் என தெவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஈழத்தமிழ் தேசம் இதனை எதிர்கொள்வதற்கான ஏழு வியூகங்களை முன்வைத்துள்ளார்.
ஈழத்தமிழர் தேசம் இவ் வருடத்தின் போது எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்த சில விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன் தனது புத்தாண்டுச் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளதோடு, ஈழத்தமிழர் தேசத்தின் இறைமையை வலியுறுத்தி, சிங்கள அரசின் மேலாதிக்கத்தில் இருந்து தமிழர் தேசத்தினை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழீழ மக்களின் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான தனது முயற்சிகளைத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்வதுடன், கீழ் உள்ள ஏழு விடயங்கள் குறித்தும் தாயகத் தலைவர்கள் எடுக்கும் சாதகமான முயற்சிகளுக்குத் தனது ஆதரவை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த பேரினவாத நிறுவனமாக மிக மிக இறுக்கமடைந்திருப்பதுடன், தமிழின அழிப்பினைத் திட்டமிட்டு நடாத்தும் அரசியல் தலவர்களின் தலைமையில் இவ் அரசு இயங்கும் நிலையில், சிங்கள ஆயுதப்படைகள்; தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து அசிங்கப்படுத்தி வரும் சூழலில், சிறிலங்கா அரசு ஓர் ஆக்கிரமிப்பு அரசு என்பதனையும் ஈழத் தமிழ் மக்களின் இறைமை தமிழரது கைகளிலேயே தான் உள்ளது என்பதனையும் தாயகத் தலைவர்கள் பிரகடனம் செய்ய வேண்டும்.
- சிறிலங்கா அரசின் அரசியல் யாப்பை மாற்றியமைக்கும் முயற்சியினைத் தற்போதய சிறிலங்கா ஆட்சியாளர்கள் மேற்கொள்வதாகத் தற்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சிறிலங்கா அரசின் யாப்பு மாற்ற முயற்சிகள் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்குச் சேவை செய்யும் முயற்சியாகவும் தற்போதய ஆட்சியாளர்களின் நலன்களை உறுதி செய்யும் வழியுமாகவே இருக்கும் என்பதனால் தமிழ்த்; தலைவர்கள் அம் முயற்சியினைப் புறக்கணிக்க வேண்டும்.
- தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் படைகள் தமிழர் தாயகப் பிரதேசத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற அறைகூவலைத் தாயகத் தமிழ்த் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
- அனைத்துலக அரசுகள் தமிழர் தாயகம் தொடர்பான எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன்னர் தமிழர் தேசத்தின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்பதனை அனைத்துலக அரசுகளுக்குத் தமிழர் தலைவர்கள் எடுத்துரைக்க வேண்டும். தமிழ் மக்களின் சம்மதம் இன்றி எடுக்கப்படும் எந்த முயற்சிகளையும் ஈழத் தமிழர் தேசம் எதிர்க்கும் என்பதனையும் தமிழர் தரப்பு அனைத்துலக சமூகத்துக்குத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.
- தமிழ் மக்களின் மீது சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டதும், இன்று மேற்கொள்ளப்படுவதும் இனவழிப்பு என்பதனையும், இவ்வினவழிப்பு தொடர்பாக அனைத்துலக நீதி விசாரணைப்பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் இயங்கும் அரசியல் தலைவர்கள் கூட்டாகப் பிரகடனப்படுத்த வேண்டும்.
- ஈழத் தமிழர் தாயகம், புலம் பெயர் தமிழ் மக்கள், தமிழக மக்கள், உலகத் தமிழ் மக்கள் இணைந்து இயங்கும் வகையிலான வியூகம் வகுக்கப்பட்டு, பொது வேலைத்திட்டமும், பொது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஐக்கிய முன்னணியும் உருவாக்கப்பட வேண்டும்.
- ஈழத் தமிழர் தேசத்துக்கான வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, பண்பாட்டுக் கொள்கை போன்றவை வகுக்கப்பட்டு இக் கொள்கைகளின் அடிப்படையில் தமிழர் தேசம் இயங்க வேண்டும்.
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன். கொரோனா உலகப் பெருந்தொற்று முழுவுலகையும் நெருக்கடிக்குள் ஆளாக்கியிருக்கும் இந் நேரத்தில், மலரும் புத்தாண்டு உலக மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியையும் பாதுகாப்பு உணர்வையும் தருவதாக அமையட்டும் என நம்பிக்கை கொள்வோமாக!
கடந்து சென்ற 2020ஆம் ஆண்டு நூறாண்டு காலமாக மனிதகுலம் கண்டிராத பெரும் நோய்த்தொற்றினை எதிர் கொண்ட வருடமாக அமைந்தது. உலகமெங்கும் 83 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கோவிட் 19 வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஏறத்தாழ 2 மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். மனித குலத்தின் செயற்பாடுகளுக்கும் இயற்கையின் அமைதிக்குமிடையே புதியதொரு சமநிலை காணப்பட வேண்டும் என்பதனை இந் நோய்த்தொற்று உணர்த்தி நிற்கிறது.
நோய்த்தொற்று உலகமெங்கும் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மக்கள் விரைவாக மீண்டெழுவதற்கான உற்சாகத்தைத் தரும் ஆண்டாக மலரும் புத்தாண்டு அமையட்டும். நோய்க்கெதிரான தடுப்பூசி விஞ்ஞான வளர்ச்சியின் துணை கொண்டு உருவாக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்வும் துணிவும் தரும் ஒரு விடயமாகும். இத் தடுப்பூசி உலக மக்கள் அனைவருக்கும், வளம்மிக்க நாடுகள், வறிய நாடுகள் என்ற பேதமின்றி அனைவருக்கும் விரைவில் கிடைப்பதற்கான வழிசெய்யப்பட வேண்டும் என்பதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
கொரோனா உலகப் பெருந்தொற்று உலகம்பரவலாக அரசுகள் மக்கள் மீது கொண்டிருக்கும் ஆதிக்கத்தை வலுப்படுத்தியிருக்கிறது. ஒடுக்குமுறை அரசுகள் கொரோனா பெருந்தொற்றுச் சூழலை தமது ஒடுக்குமுறைச் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகப் பயன்படுத்தி வருகின்றமையினையும் நாம் காண முடிந்தது. சிறிலங்கா அரசு இச் சூழலைப் பயன்படுத்தி நமது மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்குத் தடை விதித்தமையினையும் நாம் கண்டோம். ஒடுக்குமுறை அரசுகள் என்றுமே மக்களின் விரோதிகள்தான் என்பதனை கடந்து சென்ற ஆண்டு மீண்டும் உணர்த்திச் சென்றிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று புதிய வாய்ப்புகளையும் மக்களுக்குத் திறந்து விட்டிருப்பதும் உண்மையே. இணையவழித் தொடர்புத் தொழில்நுட்பம் ஊடாக மக்களும் நிறுவனங்களும் தமது கருமங்களை ஆற்றுவதற்கான வழிமுறைகளும் இக் காலகட்டத்தில் வளர்ச்சியடைந்து மேலும் விரிவடைந்து செல்கின்றன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இத் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தித் தனது செயற்பாடுகளைத் தடையின்றி மேற்கொள்ள முடிந்தமையும் எமக்கு ஆறுதலைத் தந்தது.
கடந்து சென்ற வருடத்தில் எமது தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது விதிக்கப்பட்ட தடையினை அகற்றுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்த முயற்சிகள் பிரித்தானியாவில் முன்னேற்றம் கண்டுள்ளமை நமக்கெல்லாம் மகிழ்வைத் தரும் விடயமாகும். அரசுகளுக்குச் சாதகமான உலக அரசியல் ஒழுங்கு காரணமாக விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையகற்றும் முயற்சியில் நாம் தொடர்ச்சியாகச் செயற்பட வேண்டியிருக்கும் என்பதனையும் இத் தருணத்தில் பதிவு செய்தல் பொருத்தம்.
கடந்து சென்ற ஆண்டில் எமது தாயகத்தில் சிங்களப் பேரினவாதப்பூதம் தனது தடங்களை ஆழப்பதித்து, தனது கோரப்பற்களை எமது மக்கள் மீது இன்னும் ஆழமாகப் பதிப்பதற்கான சூழலைத் தோற்றுவித்துள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் எமது மக்கள் மீதான சிங்களத்தின் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பு மேலும் தீவிரமடையும். இதனால், மலர்ந்துள்ள இப் புத்தாண்டு ஈழத் தமிழ் மக்களுக்கு சவால் மிக்கதொரு ஆண்டாகவே அமையும். இதனை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும் நடவடிக்கைகளையும் தமிழர் தேசம் மேற்கோள்ள வேண்டும்.
இப் புதுவருடச் செய்தியில் ஈழத் தமிழர் தேசம் இவ் வருடத்தின்போது எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்த சில விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன் என தனதறிக்கையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.