கனடாவின் CCSA அமைப்பானது நீண்ட 11 ஆண்டுகளுக்கு பின்னர், மது விரும்பும் கனேடிய மக்கள் எவ்வளவு அருந்தலாம் என்ற பரிந்துரையை வெளியிட்டிருந்தனர்.
மாற்றியமைக்கப்பட்ட குறித்த பரிந்துரை தற்போது பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. CCSA அமைப்பானது நீண்ட 11 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை கனேடிய மக்கள் இனிமுதல் எவ்வளவு மது அருந்த வேண்டும் என்பதையும், மீறுபவர்கள் உடல் நலம் தொடர்பான சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்திருந்தனர்.
அதில், 15 வயதுக்கு மேற்பட்ட கனடாவில் வாழும் 40% மக்கள் வாரத்திற்கு 86 கிராம் அளவுக்கு தூய்மையான மதுவை (6 standard drinks) பல வடிவங்களில் அருந்துவதாக குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பரிந்துரையில், கனடாவில் வாழும் மக்கள் இனி வாரத்திற்கு 2 standard drinks (28 கிராம்) மட்டுமே அல்லது அதற்கும் குறைவாகவே அருந்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சிறிதளவு மது அருந்தினால் தூக்கம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்ற பிரபலமான நம்பிக்கையையும் குறித்த அறிக்கை பொய்யாக்கியுள்ளது. அத்துடன், வாரத்திற்கு மூன்று முதல் ஆறு எண்ணிக்கையில் மது வகை பானங்களை உட்கொள்வது சில புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், வாரத்திற்கு ஏழு எண்ணிக்கையிலான மது பானங்களுக்கு மேல் உட்கொள்வது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் ஒரு standard drinks என அறியப்படுவது, 5% ஆல்கஹால் கலந்த 12-oz பீர் அல்லது, 12% ஆல்கஹால் கலந்த 5-oz ஒயின் அல்லது 40% ஆல்கஹால் கலந்த 1.5-oz ஷாட் எனவும் கூறுகின்றனர்.
கனடாவை பொறுத்தமட்டில், ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு பிராத்தியத்திலும் மது மருந்துவதில் வயது வரைமுறை மாறுபடுகிறது. பெரும்பாலான கனேடிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் தற்போதைய குறைந்தபட்ச சட்டப்பூர்வ மது வாங்கும் வயது 19 ஆகும். ஆனால் ஆல்பர்ட்டா, மனிடோபா மற்றும் கியூபெக் பகுதிகளில் 18 வயது என்பது குறிப்பிடத்தக்கது.