ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவரது அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் கனடாவுக்குள் நுழைவதை தடை செய்யும் சட்டமூலத்தை நேற்று செவ்வாய்க்கிழமை செனட்டில் கனடா அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போருக்குப் பின்னர் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் தொடர்ச்சியாக இந்தத் தடை அமைகிறது.
தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புக்கு காரணமானவர்கள் உட்பட புடினின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்வது அவசியம் என கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ கூறினார்.
கடந்த பெப்ரவரியில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரை ரஷ்யா தொடங்கியதில் இருந்து மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகளை கனடா விதித்துள்ளது.
அதேநேரம் உக்ரைனுக்கு ஆயுத, பொருளாதார, மனிதாபிமான உதவிகளை கனடா வழங்கி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் உக்ரைன் பயணம் செய்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மேலும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.
இதேவேளை, கனடாவின் பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் ட்ரூடோ, நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் உள்ளிட்ட கிட்டத்தட்ட 600 கனேடியர்கள் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது.
எனினும் கனடா குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தில் (IRPA) திருத்தம் செய்யாமல் தனிநபர்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடை செய்ய முடியாது என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் கனடா குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்ததும், கனடாவின் தடைகளுக்கு உட்பட்ட அனைத்து வெளிநாட்டினர் மற்றும் அவர்களின் நேரடிக் குடும்ப உறுப்பினர்கள் கனடாவுக்கு நுழைய தடை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.