உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம் சர்வதேச சமூகத்தை உலுக்கியுள்ள நிலையில், கனடாவுக்கான ரஷ்ய தூதுவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது வெளிவிவகாரத்துறை.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், உக்ரைனின் புச்சா நகரில் நடந்தேறிய அட்டூழியங்கள் தொடர்பில், புகைப்பட ஆதாரங்களை ரஷ்ய தூதுவரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பெல்ஜியத்தில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் புதன்கிழமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் அமைச்சர் Mélanie Joly. மேலும், புச்சா மற்றும் இர்பின் நகரில் ரஷ்ய துருப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள அட்டூழியங்கள் மனிதத்தன்மையற்றது என குறிப்பிட்டுள்ள அவர்,
ரஷ்ய தூதுவருடன் கனடாவின் துணை வெளிவிவகார அமைச்சர் குறித்த சந்திப்பில் கலந்து கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முன்னெடுக்கப்பட்ட பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா தூதுவரை அழைத்து கனடா தமது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.
மேலும், கீவ் சுற்றுவட்டார பகுதிகளில் ரஷ்ய துருப்புகளின் அட்டூழியங்களை சர்வதேச சமூகம் கடுமையாக விமர்சித்திருந்தது. சுமார் 35,000 குடிமக்கள் வசிக்கும் புச்சா நகரில், ரஷ்ய துருப்புகள் வெளியேறிய பின்னர், ஊடகவியலாளர்கள் மற்றும் உக்ரைனிய துருப்புகள் கண்ட காட்சி திடுக்கிட வைப்பதாக இருந்தது எனவும்,
சுமார் 50 உடல்கள் மொத்தமாக கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால், புச்சா அட்டூழியங்கள் தொடர்பில் உக்ரைன் வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.