கனேடிய பூர்வகுடி தலைவர்கள் மற்றும் கவர்னர் ஜெனரலை பிரிட்டனில் மன்னர் சார்லஸ் சந்தித்துள்ளார்.
சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிலும் இவர்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. கனடாவின் பூர்வகுடி மக்களுக்கும், பிரிட்டன் மன்னருடனான எங்கள் உறவுக்கும் இன்று வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நாள் என்று கவர்னர் ஜெனரல் மேரி சைமன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், முடிசூட்டு விழாவுக்கு சில தினங்கள் முன்பு பூர்வகுடி தலைவர்களை நேரில் சந்தித்து நல்லிணக்கம் பேண மன்னர் முடிவு செய்துள்ளதையும் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய முடியாட்சியின் கனடாவுக்கான பிரதிநிதியாக மேரி சைமன் செயல்படுகிறார். மட்டுமின்றி பூர்வகுடி மக்களில் கவர்னர் ஜெனரலாக தெரிவு செய்யப்பட்ட முதல் நபர் மேரி சைமன்.
முடிசூட்டு விழாவிற்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர்களை மன்னர் சார்லஸ் நேரிடையாக வரவேற்று உபசரித்து வருகிறார். மேரி சைமன் மற்றும் மூன்று பூர்வகுடித் தலைவர்களை மட்டுமே கனேடியர்களாக சார்லஸ் மன்னர் அதிகாரப்பூர்வமாக நிகழ்வுக்கு முன்னதாக சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்ததாகவும், சுற்றுச்சூழல், தொழில்முனைவு, பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களில் இருந்து கலாச்சார பொருட்களை திருப்பி அனுப்புதல் மற்றும் காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பூர்வகுடி பெண்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.