வெஸ்ட் நைல் வைரஸ்களை பரப்பும் நுளம்பு வகைகள் பிரம்டனில் உலாவுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இவ்வாறன நுளம்புகள் மற்றும் ஏனைய பூச்சிக் கடிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பீல் பிராந்திய சுகாதாரத் துறையினர் அந்தப் பிராந்திய மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
பீல் பிராந்தியத்தில் இவ்வாறான வைரசைக் காவிச்செல்லும் நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டமை இந்த ஆண்டில் இதுவே முதல்முறை என்று நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Mclaughlin Road South மற்றும் Steeles Avenue West பகுதியிலிருந்து பூச்சிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டதாகவும், பீல் பிராந்தியத்தின் பல பாகங்களில் இருந்தும் யூன் மாதத்தி்லிருந்து செப்டம்பர் மாதம் வரை நுளம்புகளை பிடிக்கும் பொறிமுறைகள் அமைக்கப்படுவதாகவும், குறித்த இந்த வெஸ்ட் நைல் வைரஸ் நுளம்புகள் மூலம் மனிதர்களுக்கு கடத்தப்படுவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு பெரிதாக அறிகுறிகள் எவையும் ஏற்படுவதில்ல என்றும், தொற்று ஏற்பட்டு இரண்டிலிருந்து 15 நாட்களுள் காய்ச்சல், தலைவலி, தோல் அரிப்பு, சிறு பருக்கள் ஏற்படுதல் போன்ற மிதமான அறிகுறிகள் தோன்றுவதாகவும், மிகச் சிலருக்கே மயக்கம், நரப்புத் தளர்ச்சி, செயலிழப்பு போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பீல் பிராந்தியத்தில் இதுவரை மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்றியதாக முறைப்பாடுகள் எவையும் இல்லை எனவும், எனினும் பூச்சிக் கடிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான ஏற்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிக்ள அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.