ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு உதவும் பொருட்டு கனடா முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளில் சமீபத்திய ஏமாற்றமாக பிரபல பெண் உரிமை ஆர்வலருக்கு வதிவிட அனுமதி மறுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் தரப்பில் மேற்கொண்ட தவறு காரணமாகவே குறித்த பெண் உரிமை ஆர்வலருக்கு வதிவிட அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரபல பெண் உரிமை ஆர்வலரான Farzana Adell Ghadiya என்பவரை பாதுகாப்பாக ஒட்டாவாவில் அழைத்துவரும் நடவடிக்கையில் கடந்த 7 மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளனர் Bessa Whitmore மற்றும் Sharen Craig ஆகிய இருவர்.
இருவருமே ஸ்பான்சர்களாக செயல்பட முடிவு செய்துள்ளதால், தங்கள் குடியிருப்பில் Farzana Adell Ghadiya-வை தங்க வைக்கவும் முடிவு செய்துள்ளனர். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமைகளுக்காக Ghadiya குரல் எழுப்பி வந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பாடசாலைகளை திறந்து, ஐக்கிய நாடுகள் மன்றத்துடன் இணைந்து செயல்பட்டும் வந்துள்ளார்.
மேலும், இவர் தலிபான்களால் குறிவைக்கப்படும் சிறுபான்மை இனமான Hazara எனவும் கூறப்படுகிறது. 2021ல் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் அங்கிருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு Ghadiya தள்ளப்பட்டார்.
மேலும், கனடாவில் குடியேறும் பொருட்டு, அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வந்துள்ளார். இந்த நிலையிலேயே அவருக்கான வதிவிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து 40,000 அகதிகளுக்கு வதிவிட அனுமதி அளிக்கப்படும் என்ற பிரதமர் ட்ரூடோவின் வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்றே தற்போது தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 2021ல் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, 14 மாதங்களில் 21,000 க்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகளை கனடா வரவேற்றுள்ளது. ஆனால், 2022 ஜனவரி முதல் போர் காரணமாக 100,000 உக்ரேனிய மக்கள் கனடாவில் தஞ்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.