Reading Time: < 1 minute

கனடாவில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் நேரத்தில் தாம் தொடர்ந்தும் பாப்பராசி எனப்படும் ஒளிப்படம் எடுப்பவர்களால் துன்புறுத்தப்படுவது குறித்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

வன்கூவர் தீவில் உள்ள ஒரு பொது பூங்கா வழியாக மேகன் உலா வருவதைக் காட்டும் படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்னர் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

மகன் ஆர்ச்சியுடனும் மற்றும் தனது இரண்டு நாய்களுடன் மேகன் நடந்து செல்லும்போது அந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

தம்பதியினரின் சட்டவல்லுனர்கள் இந்த விடயம் குறித்துக் கூறுகையில்; இப்படங்கள் அவர்களது அனுமதியின்றி எடுக்கப்பட்டதாகக் கூறியதுடன் பாப்பராசிகள் புதரில் ஒளிந்துகொண்டு மேகனை வேவு பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட தூர லென்ஸ்களைப் பயன்படுத்தி தங்கள் வீட்டிற்குள் படம் எடுக்க முன்னர் முயற்சிகள் எடுத்திருந்ததாகவும் பாப்பராசிகள் நிரந்தரமாக தங்கள் வீட்டிற்கு வெளியே முகாமிட்டுள்ளதாகவும் ஹரி மற்றும் மேகன் தெரிவித்துள்ளனர்.

அமைதியான வாழ்க்கையை வாழவிரும்புவதால் அரச குடும்பத்திலிருந்து விலகுவதற்கான முடிவைத் தாம் எடுத்ததாக ஹரி மற்றும் மேகன் கூறுகின்றனர்.

நானும் என் மனைவியும் அரச குடும்பத்திலிருந்து விலகுவதற்கான முடிவு, நான் இலகுவாக எடுத்த ஒன்றல்ல. பல வருடச் சவால்கள் பல மாத விவாதங்களுக்குப் பின்னர் எடுத்த முடிவு.

23 ஆண்டுகளுக்கு முன்பு நான் என் அம்மாவை இழந்தபோது, ​​நீங்கள் என்னை உங்கள் பிரிவின் கீழ் கொண்டு சென்றீர்கள். நீங்கள் என்னை இவ்வளவு காலமாக அவதானித்து வந்துள்ளீர்கள் என நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தொண்டு நிறுவன நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது இளவரசர் ஹரி குறிப்பிட்டார்.

இளவரசர் ஹரியின் தாயார் டயானா, பாப்பராசிகளின் பார்வையில் இருந்து விலக முயற்சித்தபோது 1997 ஆம் ஆண்டு ஓகஸ்ற் 31 அன்று பரிஸ் சுரங்கப்பாதையின் கொங்கிரீட் தூணில் அவரது கார் மோதி உயிரிழந்தார்.