கனடா அதன் மக்கள் தொகையில் 50 வீதத்துக்கும் மேற்பட்ட பெரியவர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ள நிலையில் வரவுள்ள இலையுதிர் காலத்தில் படிப்படியாக இயல்புக்குத் திரும்ப முடியும் என அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சிறிய கூட்டங்கள், உள்ளரங்க விளையாட்டுக்கள் மற்றும் குடும்ப ஒன்றுகூடல்களுக்கு படிப்படியாக கனேடியர்கள் திரும்ப முடியும் என கனடா பொது சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.
எனினும் அமெரிக்கா போன்று இரண்டு தடுப்பூசி போட்டவர்களும் குறிப்பிட்ட மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் முககவசம் அணியத் தேவையில்லை என்ற கொள்ளையை கனடா அறிவிக்கவில்லை.
இரண்டு தடுப்பூசிகளையும் போட்ட அமெரிக்கர்கள் சில குறிப்பிடத்தக்க இடங்கள் தவிர்ந்த வெளியிடங்களிலும் வீட்டுக்குள்ளும் முககவசம் அணிவதை தவிர்க்கலாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வியாழக்கிழமை அறிவித்தது.
இவ்வாறான நிலையில் கிட்டத்தட்ட 75 வீதமான பெரியவர்களுக்குத் ஒரு தடுப்பூசியும் 20 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டதும் வெளிப்புற சிறிய கூட்டங்கள், குடும்ப ஒன்றுகூடல்கள், உள்ளக விளையாட்டரங்குகள் மற்றும் வீடுகள் உள்ளிட்டவற்றில் கனேடியர்கள் முக கவசங்களை தவிர்த்து ஒன்றுகூட அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என கனடா பொது சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.
தொடர்ச்சியாக நிலைமைகளை அவதானித்து முக கவசங்கள் கட்டாயம் என்ற நிலை நீக்கப்படலாம். அது குறித்து அப்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம் நாங்கள் மக்களுக்கு அறிவுறுத்துவோம் என கனேடிய தலைமை பொது சுகாதார அதிகாரி தெரேசா டாம் தெரிவித்தார்.